புத்ராஜெயா, அக். 3 - இஸ்ரேல் இராணுவத்தால் நேற்று சிறை பிடிக்கப்பட்ட குளோபல் சுமுட் ஃபுளோட்டிலா காஸா உதவிக் குழுவைச் (ஜி.எஸ்.எ1ஃப்.) 15 மலேசியர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதோடு மூன்றாம் நாட்டின் மூலம் அவர்கள் விரைவில் நாடு திரும்புவர்.
சம்பந்தப்பட்ட மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஏதுவாக அவர்களுக்கு ஆலோசக சேவையும் இதர உதவிகளும் வழங்கப்படும் என்று விஸ்மா புத்ரா எனப்படும் மலேசியா வெளியுறவு அமைச்சு கூறியது.
இம்மாதம் 2ஆம் தேதி இஸ்ரேல் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட ஜி.எஸ்.எஃப். உறுப்பினர்கள் குறிப்பாக 15 மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் விடுதலையை உறுதி செய்ய மலேசிய உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அது தெரிவித்தது.
இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பை பெறுவதற்காக அமெரிக்கா உள்பட பல நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசானும் பேச்சு நடத்தி வருகின்றனர் என அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள ஆசியான் நாடுகளின் தூதரகங்களைத் தொடர்பு கொள்ளும்படி அம்மான் மற்றும் கெய்ரோ உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள மலேசிய தூதர்களுக்கு விஸ்மா புத்ரா உத்தரவிட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸாவுக்கு மனிதாபிமான உதவிப் பயணத்தை மேற்கொண்டிருந்த 15 மலேசிய தன்னார்வலர்கள் நேற்று மாலை 3.39 மணியளவில் இஸ்ரேலிய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
இந்த ஜி.எஸ்.எஃப். பயணக் குழுவில் 44 நாடுகளைச் சேர்ந்த 500 இயக்கவாதிகள் இடம் பெற்றுள்ளனர்.