ஈப்போ, அக். 3 - சிலாங்கூர், பத்து கேவ்ஸில் கடந்த திங்கள்கிழமை வேட்டையில் ஈடுபட்டிருந்த போது நண்பரால் சுடப்பட்டு ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பேராக் காவல்துறை நான்காவது சந்தேக நபரை கைது செய்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் பாகான் செராய், செமாங்கோலில் உள்ள கம்போங் செலாமில் இறந்தவரின் உடல் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஐம்பது வயதான சந்தேக நபர் அதே நாளில் மாலை 4.30 மணியளவில் கிரியான் மாவட்ட காவல் தலைமையகத்தின் வளாகத்தில் கைது செய்யப்பட்டதாகப் பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
அவரிடமிருந்து ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் அக்டோபர் 7 வரை ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை. ஆனால் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்துள்ளது என்று நூர் ஹிசாம் சொன்னார்.
மாநில போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பேராக் காவல் படையின் 115 ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெறவிருப்பவர்களை கௌரவிக்கும் நிகழ்விற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
முன்னதாக, 43 வயதான பாதிக்கப்பட்ட ஆடவரின் உடல் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மார்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயம்தான் மரணத்திற்கான காரணம் என்று கண்டறியப்பட்டதாக ஹிஷாம் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு செமாங்கோல், கம்போங் செலாமில் 32 மற்றும் 33 வயதுடைய இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஆவார். அதே நாளில் இரவு 8.30 மணிக்கு பத்து கேவ்ஸில் 36 வயதுடைய மூன்றாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.