ஹனோய், அக். 2 - வியட்நாமைத் தாக்கிய புவாலோய் சூறாவளியில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 140 பேர் காயமடைந்தனர். பெரும் அழிவை ஏற்படுத்திய இந்த சூறாவளியில் சுமார் 8.78 டிரில்லியன் டாங் (139 கோடி வெள்ளி) மதிப்புள்ள பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை கரையைக் கடந்த சூறாவளியால் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக வியட்நாம் செய்தி நிறுவனம் (வி.என்.ஏ.) தெரிவித்தது.
நேற்று மாலை 6.00 மணி நிலவரப்படி 20 பேரை இன்னும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியால் 153 வீடுகள் இடிந்து விழுந்த வேளையில் 154,565 வீடுகள் சேதமடைந்தன அல்லது கூரைகள் பறந்தன என வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் கீழுள்ள வியட்நாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
விவசாயத் துறையைப் பொறுத்தவரை 48,714 ஹெக்டர் நெல் மற்றும் பிற பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின அல்லது அழிந்தன. மேலும் 13,334 ஹெக்டர் மீன்வளர்ப்பு பகுதி சேதமடைந்தது. மேலும் 383,091 கால்நடைகள் மற்றும் கோழிகள் கொல்லப்பட்டன அல்லது மடிந்தன.
அந்நாட்டின் நான்கு மத்திய மாநிலங்களில் கிட்டத்தட்ட 2.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் மின்தடையை எதிர்நோக்கினர்.
வியட்நாமில் புவாலோய் சூறாவளி - 34 பேர் மரணம், 33.2 கோடி டாலர் சொத்துகள் சேதம்
2 அக்டோபர் 2025, 9:55 AM