சிடோர்ஜோ, இந்தோனேசியா, அக். 2 - இவ்வார தொடக்கத்தில் அடித்தளம் இடிந்து தரைமட்டமான இஸ்லாமிய உறைவிடப் பள்ளியின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய சுமார் 60 பேரை மீட்க மீட்புப் பணியாளர்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருப்பதாகப் பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து கிழக்கே 480 மைல் தொலைவில் உள்ள கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் அமைந்துள்ள அல் கோசினி பள்ளி, மேல் தளங்களில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளால் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.
அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த டஜன் கணக்கான மாணவர்கள் மீது கட்டிடம் விழுந்ததில் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த காணாமல் போனோர் பட்டியலின் அடிப்படையில் இடிபாடுகளுக்கு அடியில் 59 பேர் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது என பேரிடர் தணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் பெயர் சொல்லி அழைப்பதன் மூலம் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய மீட்புப் பணியாளர்கள் முயன்ற வேளையில் கடந்த புதன்கிழமை இரவு வரை அத்தகைய அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என அவர் தெரிவித்தார்.