புத்ராஜெயா, அக். 2 - இஸ்ரேல் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள குளோபல் சுமுட் ஃபுளோட்டிலா படகுகளில் உள்ள அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாகவும் எந்த நிபந்தனையுமின்றியும் விடுவிக்கப்பட வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது.
காஸாவுக்கு உதவிப் பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று விஸ்மா புத்ரா சற்று முன் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அதே சமயம், அந்த பிரதேசத்திற்கு உதவிப் பொருள்களைக் கொண்டுச் செல்லும் பணி பாதுகாப்பாகவும் எந்த இடையூறுமின்றியும் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என அது வலியுறுத்தியது.
சினமூட்டும் வகையிலான இந்தச் செயல் அனைத்துலக கடல் சட்டங்களையும் அனைத்துலக மனிதாபிமான சட்டங்களையும் மீறும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இஸ்ரேலின் இச்செயல் குற்றத் தன்மை கொண்டதாகவும் கோழைத்தனமானதாகவும் உள்ளதோடு அனைத்துலகச் சட்டங்களுக்கு புறம்பானதாகவும் உள்ளது என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அவசரமாக உதவித் தேவைப்படும் பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதற்கு ஏதுவாக குளோபல் சுமுட் ஃபுளோடிலா மனிதாபிமானப் பயணம் தொடரப்பட வேண்டும் என்றும் விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டது.
பாலஸ்தீனம் தற்போது இனப்படுகொலை, பட்டினி, சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்களுக்கு உதவும் நோக்கிலான இந்த மனிதாபிமான உதவிப் பயணம் சட்டரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் சரியானது என்பதோடு அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டிய நடவடிக்கையாகும் என்று அது குறிப்பிட்டது.
மனுக்குல கோட்பாடுகள் மற்றும் நெறிகளை புறக்கணிக்கும் இஸ்ரேலின் செயலை உலகம் இனியும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கக்கூடாதுஎன்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.