பந்திங், அக். 2 - மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு உதவித் திட்டங்கள் வாயிலாக வட்டார மக்கள் பயன் பெறுவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் பந்திங் தொகுதி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ‘இதர விண்ணப்பங்கள்‘ பிரிவில் பந்துவான் சிஹாட் சிலாங்கூர் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு தொகுதி சேவை மையம் அண்மையில் உதவிகளை வழங்கியது..
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த மேத்தியு, சரோஜினி தேவி, குணசீலன், தமிழ் செல்வி, துங் லாய் ஹூவாட், வித்யா நங்கை ஆகியோருக்கு மருந்தகங்கள் வாயிலாக தேவையான பொருள்களை தொகுதி சேவை மன்ற பொறுப்பாளர்கள் வழங்கினர்.
இத்தகைய திட்டங்கள் வாயிலாக சம்பந்தப்பட்டவர்களின் சுமை குறையும் அதேவேளையில் பந்துவான் சிஹாட் சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக உதவிகள் வழங்கப்படும் தகவலை பொது மக்கள் அறிந்து பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பராய்டு தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
பந்திங் வட்டார மக்களின் சுபிட்சம் மற்றும் நல்வாழ்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தொடர்ந்து உதவுவதற்கான கடப்பாட்டை பந்திங் தொகுதி சேவை மையம் கொண்டுள்ளது என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இந்த மருத்துவ உதவிப் பொருள் உதவித் திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு துணை புரிந்த கோல லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் நடேசன், சுங்கை மாங்கிஸ் கிராமத் தலைவர் ரபிக் அனுவார், பந்திங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் சாமிதுரை ஆகியோருக்கும் நாம் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.