ஷா ஆலம், அக். 2 - காஸாவுக்கான சுமுட் ஃபுளோட்டிலா உதவி படகுப் பயண அணியில் இடம் பெற்றிருந்த மலேசியர்களை இஸ்ரேல் கைது செய்ததற்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கண்டம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அனைத்துலகக் கடல் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தும் மற்றும் படகுகளில் அத்துமீறி நுழையும் இஸ்ரேலின் செயல் அனைத்துலக கடல் சட்டத்திற்கு புறம்பானதாகும். கடுமையான வார்த்தைகளில் இந்த கோழைத்தனமான செயலை நான் கண்டிக்கிறேன்.
கைது செய்யப்பட்ட அனைத்து தன்னார்வலர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறேன் என்றார் அவர்.
ஜி.எஸ்.எஃப். என்பது காஸா மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை படகில் கொண்டுச் செல்லும் உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர் குழுக்களின் மனிதாபிமானப் பயணமாகும். இந்த படகுகள் இஸ்ரேலின் முற்றுகைக்கு இலக்காகியுள்ளன.
முன்னதாக, இந்த ஜி.எஸ்.எஃப். மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டுள்ள மலேசிய தன்னார்வலர்களில் ஒரு பகுதியினர் தாங்கள் இஸ்ரேலியப் படைகளால் சிறை பிடிக்கப்பட்டதை சித்தரிக்கும் அவசர காணொளிப் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
இதே போன்ற கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆயுதமற்ற சிவிலியன்கள் மற்றும் மனிதாபிமான உதவிப் பொருள்களை ஏற்றிருந்த ஃபுளோட்டிலா மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மனிதாபிமான பணிகளைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மட்டுமின்றி உலகின் மனசாட்சியையும் முற்றிலுமாக அவமதித்துள்ளது என்று அவர் சொன்னார்.