ஷா ஆலம், அக் 2 - செபு மற்றும் அதனச் சுற்றியுள்ள பகுதிகளைத் தாக்கிய வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மலேசியா தனது அனுதாபத்தைய தெரிவித்துக் கொண்டுள்ளது.
இந்த பூகம்பம் காரணமாக உயிரிழப்பு மற்றும் பாதிப்பினால் பிலிப்பைன்ஸ் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் மற்றும் சிரமங்களில் மலேசியா பங்கு கொள்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசிய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாகப் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறிப்பாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று அவர் முகநூல் பதிவு மூலம் தெரிவித்தார்.
மலேசியா பிலிப்பைன்ஸ் நாட்டுடன் துணை நிற்கிறது என்றும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
செபு மாநிலத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 9.59 மணிக்கு 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தொடக்கத்தில் அறிவித்தது.
பின்னர் அந்த நிறுவனம், ரிக்டர் அளவை 6.9 ஆக திருத்தியது. மேலும் போகோ நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
செபுவில் பூகம்பம் - மலேசியா அனுதாபம், நிவாரண உதவிகள் வழங்கத் தயார்
2 அக்டோபர் 2025, 6:14 AM