ஷா ஆலம், அக் 2: சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான தீபாவளி பொது உபசரிப்பு கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் அடுத்த மாதம் 17ஆம் தேதி சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதில் பல்வேறு இனங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த சுமார் 10,000 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார். இதன் தொடக்க விழாவை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்நிகழ்வு, பல இன சமூகங்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதையும், மாநிலத்தின் நல்லிணக்கத்தின் அடித்தளமான கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடு ஒற்றுமையின் உணர்வை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒற்றுமையின் சூழலில் கலாச்சார பாரம்பரியத்தை பராமரிப்பதற்கான ஓர் ஊடகமாகவும் செயல்படுகிறது,” என அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தீபாவளி கொண்டாட்டத்தின் தனித்துவத்தை குறிக்கும் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என பாப்பாராய்டு தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்களுக்கு ஒதுக்கீடு காசோலையை ஒப்படைத்தல், ஐ-சிட் உபகரண உதவியை ஒப்படைத்தல் மற்றும் விருந்து ஆகியவை இடம்பெறும்.
“இந்த வரவேற்பு, கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதிலும், பல இன மக்களின் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதிலும் மாநில அரசின் உறுதிப்பாட்டை தெளிவாகக் காட்டுகிறது. எனவே மக்களிடையே புரிந்துணர்வை வலுப்படுத்தும் முயற்சிகள் எப்போதும் வலியுறுத்தப்பட வேண்டும்.