சிரம்பான், அக். 2 - இங்குள்ள பள்ளி ஒன்றின் கழிப்பறையில் மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காம் ஆண்டு மாணவர் இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட அந்த பத்து வயதுச் சிறுவன் அருகிலுள்ள தனியார் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது அதிகாலை 1.19 மணிக்கு சம்பவம் குறித்து தனது தரப்பினருக்கு தகவல் கிடைத்தாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது கூறினார்.
சம்பந்தப்பட்ட அந்த மாணவரை பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிகிச்சை அளித்த மருத்துவர் அம்மாணவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.
அம்மாணவர் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு பள்ளி கழிப்பறையில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய இன்று ரெம்பாவ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் இச்சம்பவம் சட்டத்தின் 507சி பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக எந்தவிதமான ஊகங்களையும் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியது.
இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து விசாரிக்கும் பொறுப்பை தமது தரப்பு முழுமையாகக் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் கூறினார்.
பள்ளி கழிப்பறையில் மயங்கி விழுந்து நான்காம் ஆண்டு மாணவர் மரணம்
2 அக்டோபர் 2025, 3:09 AM