கிள்ளான், அக். 2 - மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் அஃப்ஸா ஃபாடினி டத்தோ அப்துல் அஜிஸ் அரச திருமண ஊர்வலத்தை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் அரச கேலரியில் தொடங்கிய இந்த ஊர்வலத்தைக் காண பொது மக்கள் காலை 7.00 மணி முதல் திரண்டனர்.
பல்வேறு வடிவங்களிலான உடைகளை அணிந்திருந்த அவர்கள்
சிலாங்கூர் ராஜா மூடாவை நோக்கி அசைத்து தங்கள் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவதற்காக கையில் சிலாங்கூர் கொடியே ஏந்தி காத்திருந்தனர்.
ராஜா மூடா ரோல்ஸ் ரோய்ஸ் காரில் சுல்தான் அப்துல் அஜிஸ் கேலரியிலிருந்து 1.2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இஸ்தானா ஆலம் ஷா அரச அரண்மனை பள்ளிவாசலுக்கு ஊர்வலமாகச் செல்வார்.
கிள்ளான், இஸ்தானா ஆலம் ஷாவில் உள்ள அரச அரண்மனை பள்ளிவாசலில் நடைபெறும் திருமண வைபவத்திற்கு சிலாங்கூர் முப்தி டத்தோ செத்தியா டாக்டர் அன்ஹார் ஒபிர் தலைமை தாங்குவார்.
இந்த அரச திருமணத்தை முன்னிட்டு ஜாலான் இஸ்தானாவை அதாவது சுல்தான் அப்துல் அஜிஸ் கேலரி எதிர்ப்புறம் இருந்து இஸ்தானா ஆலம் ஷா அரண்மனையின் நுழைவாயில் வரையிலான பகுதியை மட்டும் போக்குவரத்துக்கு மூட மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஊர்வலம் பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பணியில் சுமார் 400 போலீஸ்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அரச திருமணத்தை முன்னிட்டு கிள்ளான் அரச மாநகரை அழகுப்படுத்தவும் தரம் உயர்த்தவும் கிள்ளான் அரச மாநகர் மன்றம் 30 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.