கோலாலம்பூர், அக். 2 - டாமன்சாரா டோல் சாவடி அருகே திங்கட்கிழமை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு பல்நோக்கு வாகனத்தில் (எம்.பி.வி.) சுமார் 33 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 150 கிலோகிராம் ஷாபு போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கருப்பு நிற மெக்ஸஸ் வாகனத்தை மத்திய மண்டல ஏ1 நெடுஞ்சாலை ரோந்து குழு, புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தின் 18வது கிலோ மீட்டரில் கண்டு அதனை நிறுத்த உத்தரவிட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகப் புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசான் பாஸ்ரி தெரிவித்தார்.
போலீசாருடன் ஒத்துழைக்க மறுத்த ஓட்டுநர் டோல் சாவடியின் தடுப்பை மோதி டாமன்சாரா டோல் சாவடி அருகே வலது தடத்தில் வாகனத்தை கைவிட்டு தப்பினார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ஆறு பச்சை நிற சாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் 'சீன பின் வெய்' என்று சீன மொழியில் எழுதப்பட்ட 25 சிறிய பொட்டலங்கள் இருந்தன.
அங்கு மொத்தம் 150 பொட்டலங்கள் காணப்பட்டன. ஒவ்வொரு பொட்டலமும் ஒரு கிலோ எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் ஷாபு போதைப் பொருள் இருப்பதாக நம்பப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் வாகனம் மேல் விசாரணைக்காக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தில் உள்ள போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டன என அவர் சொன்னார்.
இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் வேளையில் சந்தேக நபரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர் எனறு தெரிவித்தார்.
மேலும், தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நோர் இசாட் நோராசாய்ரியை 016-8289910 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
டாமன்சாரா டோல் சாவடி அருகே வெ.33 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ ஷாபு பறிமுதல்
2 அக்டோபர் 2025, 1:55 AM