ஈப்போ, அக். 1- கடந்த மாதம் ஒரு நாயை அடித்துக் கொன்றதாக கொண்டுவரப்பட்டக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட மெக்கானிக்கிற்கு இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 20,000 வெள்ளி அபராதம் விதித்தது.
அபராதம் செலுத்தத் தவறிறால் ஒரு மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க 23 வயதான எம். தினேஷ்குமாருக்கு மாஜிஸ்திரேட் அனிஸ் ஹனினி அப்துல்லா உத்தரவிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் இரவு 10.30 மணி மற்றும் காலை 9.00 மணிக்கு இடையே ஈப்போவின் லெபோ கிளெபாங் உத்தாரா 30, தாமான் ஆர்கிட்டில் உள்ள ஒரு வீட்டில் ஆண் நாயை இரும்புக் கம்பியால் கொடூரமாக அடித்து காயத்தை ஏற்படுத்தியதாக தினேஷ்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது 20,000 முதல் 100,000 வெள்ளி வரை அபராதம் மற்றும் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் 2015 ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தின் 29(1)(ஏ) பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.
வழக்கறிஞர் யாரும் ஆஜராகாத பிரதிவாதி, பெற்றோரை ஆதரிக்க வேண்டிய நிலையில் இருப்பதோடு வேறு எந்த நிலையான வருமானமும் தனக்கு இல்லை என்றும், தவிர, அந்த விலங்கு தன்னைக் கடித்ததாகவும் கூறி குறைந்தபட்ச தண்டனை விதிக்கும்படி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
நாயை அடித்துக் கொன்ற தினேஷ்குமாருக்கு வெ.20,000 அபராதம்
1 அக்டோபர் 2025, 9:39 AM