ஷா அலாம், அக் 1: பெட்டாலிங் ஜெயா நகரத்தின் சுத்தம் மற்றும் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதக் குப்பை கொட்டுதல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் ‘PJ Watch’ முயற்சி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று பெட்டாலிங் ஜெயா நகர மேயர் முகமது ஜாஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.
இந்த திட்டம் குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராவில் மற்றும் அதிக ஆபத்து உள்ள இடங்களில் அமலாக்க அதிகாரிகள் மேற்கொள்ளும் ரோந்துப் பணிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
செப்டம்பர் மாதம் வரை, கண்காணிப்பு கேமராவின் வழியாக 71 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 40 நபர்கள், 28 வாகனங்கள் மற்றும் மூன்று நிறுவன வளாகங்கள் தொடர்புடையவையாக இருந்தன.
அதே நேரத்தில், 2007ஆம் ஆண்டின் எம்பிபிஜே (MBPJ) சட்டத்திருத்த விதிகளின் கீழ் மொத்தம் 348 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 120 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 62 நபர்கள், 12 வாகனங்கள் மற்றும் 46 நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா சுத்தமாகவும், மாசில்லாமலும் நிலைத்திருக்க “PJ Watch”ஒரு முக்கியமான முயற்சியாக இருப்பதாகவும், சட்டவிரோதக் குப்பை கொட்டுதல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.