ஷா ஆலம், அக்.1 - கரையான் அரிப்பினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ரவாங் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வியில் ஒரு போதும் சமரசம் செய்யப்படாது என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் வாக்குறுதியளித்துள்ளார்.
அப்பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ரவாங் பள்ளியின் நிலைமையை நேரில் காண்பதற்காக செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங், செலாயாங் நகராண்மை கழக உறுப்பினர் எண்டி, மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகளோடு தாம் பள்ளிக்கு வருகை புரிந்ததாக அவர் சொன்னார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக நான்கு வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அங்கு நடைபெற்ற விளக்கமளிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுப்பணித் துறையின் ஆலோசனையின் பேரில் அந்த வகுப்பறைகள் கடந்தாண்டு முதல் காலி செய்யப்பட்டு விட்டன.
அந்த வகுப்புகளை சீரமைப்பதற்கு பள்ளி நிர்வாகமும் மாவட்ட கல்வி இலாகாவும் விண்ணப்பம் செய்துள்ளன என அவர் தெரிவித்தார்.
இப்பள்ளியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 335,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்ட நிலையில் பள்ளியின் கட்டமைப்பு மோசமான நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் பள்ளியை முழுமையாக மறுசீரமைப்பு செய்வதே சிறந்த து என அரசாங்கம் கருதுகிறது என அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பற்ற நிலையில் மாணவர்கள் கல்வி பயில இயலாது என்பதால் இந்த வகுப்பறைகள் பயன்படுத்தப்படவில்லை. கடந்தாண்டு தொடங்கி பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதர வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அனைத்து மாணவர்களும் பயில்வதற்கு தேவையான இட வசதியை அந்த பள்ளி கொண்டுள்ளது என சுவா கூறினார்.