கோலாலம்பூர், அக். 1 - தகவல் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சின் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் முயற்சியில் இங்குள்ள கோலாலம்பூர் கோபுர நுழைவாயிலில் தமிழ் மொழிக்கு இடம் கிடைத்துள்ளது.
அந்த பிரசித்தி பெற்ற சுற்றுலா மையத்தின் நுழைவாயிலில் வருகையாளர்களை வரவேற்கும் வாசகங்கள் மலாய், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகள் இடம் பெற்றிருந்த நிலையில் தமிழ் மொழிக்கு மட்டும் இடம் வழங்கப்படாமலிருந்தது இந்திய சமூகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இவ்விவகாரத்தை துணையமைச்சர் தியோவின் கவனத்திற்கு கணபதிராவ் கொண்டுச் சென்றதைத் தொடர்ந்து அவர் கோலாலம்பூர் கோபுர நிர்வாகத்தினரைத் தொடர்பு அந்த நுழைவாயிலில் தமிழுக்கும் இடம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இந்த முயற்சியின் விளைவாக அந்த நுழைவாயிலில் "வணக்கம், வரவேற்கிறோம்" என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்
கணபதிராவுடன் மலேசியாவின் பெருமைக்குரிய சின்னங்களில் ஒன்றான கோலாலம்பூர் கோபுரத்தில் அமைந்துள்ள வரவேற்புச் சுவரின் புதிய மேம்பாடுகளை தாம் பார்வையிட்டதாக தியோ அறிக்கை ஒன்றில் கூறினார்.
வரவேற்புச் சுவரில் தமிழ்மொழி இடம் பெறவில்லை எனத் தெரியவந்ததும் உடனடியாக அதன் நிர்வாகத்தை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். விரைவான செயல்பாட்டின் மூலம் இப்போது அந்தச் சுவரில் தமிழுடன் சேர்ந்து இபான் மற்றும் கடசான் மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், 2021 நவம்பரில் அறிமுகம் கண்டு 20க்கும் மேற்பட்ட அனைத்துலக மொழிகளோடு இம்மொழிகள் இணைந்துள்ளன.
இந்தச் சேர்க்கை, மலேசியாவின் உண்மையான அடையாளமான பன்முகத்தன்மை, உடன்பாடு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.
வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு தமிழ்மொழியின் இணைப்பு சிறப்பான அர்த்தத்தை அளிக்கிறது. அனைவரும் கோலாலும்பூர் கோபுரத்திற்கு வருகை தந்து, நம் நாட்டின் பெருமையை பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.