ஈப்போ, அக். 1 - கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் காணாமல் போனதாகப் புகார் செய்யப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் மூதாட்டியின் உடல் செலாமா, ரந்தாவ் பாஞ்சாங், கம்போங் தஞ்சோங் லெங்கோங் சாலையோரம் உள்ள கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் கண்டு பிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பணிகளை மேற்கொண்டிருந்த மண்வாரி இயந்திர ஓட்டுநரிடமிருந்து நேற்று காலை 11.45 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக செலாமா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சருடின் சமா கூறினார்.
அப்பகுதியில் சாலையோரம் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டிருந்த அந்த மண்வாரி இயந்திர ஓட்டுநர் கால்வாயில் மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கண்டார். நெருங்கிச் சென்று பார்த்த போது மனித உடல் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் என அவர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளின் பதிவு எண்களை சோதனையிட்ட போலீசார் அது கடந்த மாதம் 8ஆம் தேதி காணமால் போனதாகப் புகார் செய்யப்பட்ட மூதாட்டி பயன்படுத்தியது என்பதைக் கண்டறிந்தனர்.
எனினும், இறந்தவரை அடையாளம் காண்பதற்காக சவப்பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ள நிலையில் அந்த மூதாட்டியின் உடல் சவப்பரிசோனைக்காக செலாமா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.