ஷா ஆலம், அக். 1 - சுக்மா 2026 போட்டிக்கான இரண்டு முக்கிய இடங்களாக விளங்கும் சுபாங்கில் உள்ள டாருல் ஏஹ்சான் நீச்சல் மையம் மற்றும் துப்பாக்கி சுடும் தளம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி நடைபெற்று வருகின்றன.
இந்த இரண்டு மையங்களும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் தயாராவதற்கு இருக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி, போட்டியிடும் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற வகையில் அனைத்துலக அளவிலான மையங்களாக இவை விளங்கும் என உறுதியளித்தார்.
இந்த இரண்டு இடங்களைத் தவிர, பல்வேறு வசதிகளும் தற்போது தீவிரமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஊராட்சி மன்ற நிலையிலும் தற்போது மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைக்குள் பணிகள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
சுக்மா 2026 இல் இடம் பெறும் அனைத்து 474 விளையாட்டு நிகழ்வுகளிலும் சிலாங்கூர் பங்கேற்கும் என்று நேற்றிரவு சிலாங்கூர் இளைஞர் மாநாட்டில் உரையாற்றியபோது முகமது நஜ்வான் அறிவித்தார்.
அனைத்து வகை விளையாட்டு நிகழ்வுகளிலும் போட்டியிட விளையாட்டு வீரர்களை அனுப்புவோம் என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் சுக்மா 2026 போட்டி அடுத்தாண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பாரா சுக்மா செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறும்.
சுக்மா தொடக்க விழா சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் தடத்திலும் நிறைவு விழா பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கிலும் நடைபெறும்.
இந்த முறை 37 விளையாட்டுகளை உள்ளடக்கிய 474 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ரக்பி போன்ற 30 முக்கிய விளையாட்டுகளும், மின் விளையாட்டு, கிரிக்கெட் மற்றும் கால்பந்து உள்ளிட்ட ஏழு கூடுதல் விளையாட்டுகளும் அடங்கும்.
சுக்மா 2026: 474 போட்டிகளில் சிலாங்கூர் பங்கேற்பு - அரங்க சீரமைப்புப் பணிகள் தீவிரம்
1 அக்டோபர் 2025, 3:36 AM