கோலாலம்பூர், அக். 1 - நாட்டில் 2025ஆம் ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் ஆயுள் காலம் உயர்வு காணும் என கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் பிறக்கும் குழந்தைகள் 75.3 வயது வரை ஆயுளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கபடுவதாக மலேசிய புள்ளிவிபரத் துறை கூறுகிறது.
எனினும், இனரீதியாகப் பார்க்கையில் இந்தியர்கள்தான் குறைவான ஆயுளைக் கொண்டிருப்பர் என்பது புள்ளி விபரத்துறையின் ஆய்வின் வழி தெரியவருகிறது.
சீன சமூகத்தில் 2025ஆம் ஆண்டு பிறப்பவர்களின் ஆயுள்காலம் மிக உயர்வாக அதாவது 77.3 வயதாக இருக்கும் வேளையில் இந்தியர்களின் ஆயுள்காலம் 71.8 வயதாக மட்டுமே இருக்கும் என அத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸிர் மாஹிடின் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இவ்வாண்டு பிறக்கும் பெண் குழந்தைகளின் ஆயுள் காலம் 77.9 வயதாகவும் ஆண்களின் ஆயுள் காலம் அதை விட 4.8 ஆண்டுகள் குறைந்து 73.1 வயதாகவும் இருக்கும் என்பதை மலேசிய குறுகிய ஆயுள் அட்டவணை பதிப்பில் கூறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மாநிலங்களைப் பொறுத்த வரை 2023 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் பிறக்கும் அதிக ஆயுள் கொண்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளில் சிலாங்கூர் முதலிடத்தில் இருக்கும் வேளையில் திரங்கானு குறைந்த ஆயுளைக் கொண்ட மாநிலமாக இருக்கும்.
சிலாங்கூர், சரவாக் மற்றும் கூட்டரசு பிரதேசம் ஆகியவை 2025 தேசிய ஆயுள் அளவீட்டை கடந்த மாநிலங்களாக விளங்கும் என்று உஸிர் குறிப்பிட்டார்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூரில் 2025ஆம் ஆண்டு பிறக்கும் மலாய் மற்றும் சீனக் குழந்தைகளின் ஆயுள் காலம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.