கோலாலம்பூர், செப். 30 - சிலாங்கூர், பூச்சோங்கில் உள்ள பத்து 13 டோல் சாவடி அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரோடுவா மைவி கார் ஓட்டுநருக்கு எதிராக மோட்டார் சைக்கிளோட்டிகள் கும்பல் நடத்திய சாலை ரவுடித்தனம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஆறு பதின்ம வயதினர் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதிமூன்று முதல் 21 வயதுக்குட்பட்ட அனைத்து ஆடவர்களும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்றிரவு பூச்சோங் மற்றும் ஷா ஆலம் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஃபாரிட அகமது தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் அனைவரும் இன்று காலை பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டதாக அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.04 மணிக்கு 52 வயது பாதுகாவலர் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு ஒரு புகார் கிடைத்தது.
அதே நாளில் அதிகாலை 4.00 மணிக்கு டோல் சாவடி வழியாகச் சென்று கொண்டிருந்த பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பரும் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதற்காக சாலையோரம் காரை நிறுத்தியுள்ளனர்.
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர், நீங்கள் காவல்துறையினரா என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
கேள்விகளுக்கு பதிலளிக்காத பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து அகன்றனர். ஆனால், அவர்களை நிறுத்தச் சொல்லி மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டதோடு பாதிக்கப்பட்டவர்களின் காரையும் உதைத்து சேதப்படுத்தியது என்று அவர் கூறினார்.
தண்டனைச் சட்டத்தின் 279 மற்றும் 427வது பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக முகமது ஃபாரிட் கூறினார்.