சிப்பாங், செப். 30 - விமான ஊழியர்கள் இருவருக்கு எதிராக குற்றவியல் பலாத்காரம் மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை கம்போடிய நபர் ஒருவர் இன்று இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இரண்டு குற்றச்சாட்டுகளும் மொழிபெயர்ப்பாளர் மூலம் மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்ட பின்னர், 41 வயதுடைய பயண முகவரான லின் வெய்டா நீதிபதி அகமது ஃபுவாட் ஓத்மான் முன்னிலையில்
குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.
இருப்பினும், இந்த வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் நீதிமன்றம் தண்டனையை நாளைக்கு ஒத்திவைத்தது
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) இரவு 7.50 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) செட்டிலைட் கட்டிடத்தில் பாத்தேக் ஏர் விமானப் பாதுகாப்பு அதிகாரி ஷேக் முகமது ஷாபிக் ஷ் காலிட் மீது குற்றவியல் பலாத்காரத்தைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் மூன்று மாத சிறைத்தண்டனை, 1,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 352 இன் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அதே நாளில் மாலை சுமார் 5.20 மணியளவில் ஹாங்காங்கிலிருந்து கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தின் முனையம் ஒன்றுக்கு வந்த OD606 விமானத்தில் பாத்தேக் ஏர் கேபின் ஊழியரான யூசாய் யூசோப்பை அவதூறான வார்த்தைகளால் திட்டியதாக இரண்டாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
1955 ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டத்தின் பிரிவு 14 இன் கீழ் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டில் அதிகபட்சமாக 100 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
பாத்தேக் ஏர் பணியாளர்களிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதை கம்போடிய ஆடவர் ஒப்புக் கொண்டார்
30 செப்டெம்பர் 2025, 8:46 AM