ஷா ஆலம், செப். 30 - தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாற்று வழிகளை கண்டறியுமாறு மாநிலத்திலுள்ள தொகுதி சேவை மையங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
பல தொகுதிகளில் மாநில அரசு ஒதுக்கியுள்ள பற்றுச்சீட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் பலரது விண்ணப்பங்களை யுபென் எனப்படும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு நிராகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவோர் ஏமாற்றமடைவதைத் தவிர்க்க மாற்று வழிகள் மூலமாக அவர்களுக்கு பற்றுச்சீட்டுகளை வழங்கலாம் என அவர் ஆலோசனை கூறினார்.
உதாரணத்திற்கு, நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பந்திங் தொகுதியில்கூட மாநில அரசு வழங்கிய பற்றுச்சீட்டுகள் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் போதுமானதாக இல்லை. ஆகவே, விடுபட்டவர்களுக்கு வழங்குவதற்காக 99 ஸ்பீட்மார்ட் கடையில் பற்றுச்சீட்டுகளை வாங்கியுள்ளேன் என அவர் சொன்னார்.
பெருநாளை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் வகையில் தொகுதி மானியத்திலிருந்து கணிசமானத் தொகையை அவர்கள் ஒதுக்கலாம் என்றார் அவர்.
இவ்வாண்டு பல தொகுதிகளில் பற்றுச்சீட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பந்திங் தொகுதிக்கு கடந்தாண்டு 400 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்ட வேளையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 450ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த பற்றுச் சீட்டு பங்கீட்டு முறை சம்பந்தப்பட்ட தொகுதிகளில் உள்ள இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இவ்வாண்டு பற்றுச் சீட்டுகளின் எண்ணிக்கையை 22,150 ஆக அதிகரித்துள்ளோம். இதற்காக 44 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டு செந்தோசா தொகுதிக்கு மிக அதிகமாக அதாவது 700 பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு இந்த தொகுதிக்கு 600 பற்றுச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இது தவிர கோத்தா கெமுனிங் உள்பட பல தொகுதிகளுக்கு இம்முறை பற்றுச் சீட்டுகள் உயர்த்தப்பட்டுள்ளன என அவர் சொன்னார்.
இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் பெருநாளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். என அவர் குறிப்பிட்டார்.