நியுயார்க், செப். 30 - காஸா நகரில் சுமார் எட்டு கிலோ மீட்டர் பரப்பளவிலான பகுதியில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மேற்காசிய பாலஸ்தீனர்களுக்கான அமைப்பு கூறியது.
இதன் காரணமாக சுமார் எழுபதாயிரம் பேர் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியில் சிக்கியுள்ளனர். இந்த நெருக்கடியான சூழலில் அவர்களால் ஒரு கூடாரத்தை கூட நிர்மாணிக்க முடியவில்லை.
இதனால் அவர்கள் குடியிருக்க இடமற்றவர்களாக உள்ளனர் என்று அந்த அமைப்பின் பேச்சாளரான அட்னான் அபு ஹஸ்னா கூறினார்.
இப்போது காஸா நகரிலிருந்து காஸா தீபகற்பத்தின் மத்திய பகுதிக்கு மக்கள் பசி பட்டினியோடு இடம் பெயர்கின்றனர். உடனடி போர் நிறுத்தமும் மனிதாபிமான உதவிகள் விரைந்து அனுமதிக்கப்படுவதும் இப்போதைய அவசியத் தேவையாகும் என அவர் சொன்னார்.
வரும் செப்டம்பர் மாதவாக்கில் டெய்ர் அல்-பாலா மற்றும் கான் யூனிஸ் பகுதிகளுக்கும் பஞ்சம் பரவும் போது நிலைமை மேலும் மோசமடையும் என ஒருங்கிணைந்த உணவு முன்னெடுப்பு கடந்த ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி கூறியிருந்தது.
நவீன யுகத்தின் மிக மோசமான மனிதாபிமான பேரிடரை காஸா மக்கள் தற்போது எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது.
மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் உணவு மற்றும் மருந்து விநியோகம் முற்றாகத் தடுக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.