கோலாலம்பூர், செப். 30 - புக்கிட் காஜாங் டோல் சாவடியில் கடந்த சனிக்கிழமை ஒரு குழந்தையின் உயிரைப் பலிகொண்ட விபத்திற்கு காரணமான லோரி மீது மிரோஸ் எனப்படும் சாலை பாதுகாப்புக் கழகம் ஆய்வினை நடத்தும்.
அந்த விபத்துக்கு லோரியின் பிரேக் செயல்படாதது அல்லது வேறு காரணங்கள் குறித்து கண்டறிவதை நோக்கமாக கொண்ட இந்த சோதனையை விபத்து விசாரணைப் பிரிவு மேற்கொள்ளும் என்று மிரோஸ் அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த விசாரணை விரிவான முறையில் மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக அரச மலேசிய போலீஸ் படை, சாலை போக்குவரத்து இலாகா மற்றும் அபாட் எனப்படும் தரை போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பும் நாடப்படும் என அந்த அமைப்பு தெரிவித்தது.
விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கும் தடுப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கும் இந்த சோதனை மிக முக்கியமானதாகும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
வாகனங்கள் குறிப்பாக எடை ஏற்றக்கூடிய மற்றும் தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய கனரக வாகனங்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்வது அவசியம் என்று மிரோஸ் வலியுறுத்தியது.
பயணத்தை தொடர்வதற்கு முன்னர் வாகனத்தின் பிரேக், டயர் மற்றும் முக்கிய பாகங்களை ஓட்டுநர்களும் வாகன உரிமையாளர்களும் முறையாக சோதிப்பது அவசியம். அதே சமயம், வாகனங்களை தவணை அடிப்படையில் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதோடு வேகம் உள்ளிட்ட சட்ட விதிகளைப் பின்பற்றவும் போதுமான நேரம் ஓய்வெடுக்கவும் வேண்டும் என அது கூறியது.
கடந்த சனிக்கிழமை புக்கிட் காஜாங் டோல் சாவடியில் லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு கார் மற்றும் இரு எஸ்.யு.வி. வாகனங்களை மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தோடு மேலும் எழுவர் காயங்களுக்குள்ளாயினர்.