ஷா ஆலம், செப் 30 - ஜாலான் ஷாஸ்பித்தல் சுங்கைப் பூலோவில் சட்டவிரோதமாக யூ-டர்ன் (U Turn) செய்த டிரெய்லர் ஒன்று சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் மோதியது.
அந்த டிரெய்லர் யூ-டர்ன் செய்யும் நேரத்தில் பின்னோக்கிச் நகர்ந்தபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை மோதியதைக் காட்டும் 1 நிமிடம் 32 வினாடிகள் கொண்ட டேஷ்போர்ட் வீடியோ பதிவு வைரலானது.
யூ-டர்ன் செய்வதை தடைசெய்யும் எச்சரிகை அடையாள அறிவிப்பு பலகை அச்சாலை சந்திப்பு இடத்தில் இருந்துள்ளது. இருப்பினும், அந்த டிரெய்லர் வளைவதற்கு முயற்சிப்பதை வீடியோ பதிவு தெளிவாகக் காட்டுகிறது.
மாலை மணி 3.40க்கு நடந்த இந்த சம்பவத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அந்த டிரெய்லர் ஓட்டுனர் தவறுதலாக அப்பாதையில் வளைந்து, வாகனத்தை பின்னால் நகர்த்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது என சுங்கை பூலோ மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்ரிட்டெண் முகமட் ஹவிஸ் முகமட் நோர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து டிரெய்லர் ஓட்டுநரும், கார் உரிமையாளரும் புகார் செய்வதற்கு சுங்கை பூலோ மாவட்டக் காவல்நிலையத்திற்கு வந்திருந்ததாக இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் ஹவிஸ் குறிபிட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM10,000 வரை அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 43(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, சாலைப் பயனர்கள் கவனமாக இருக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.