கோத்தா பாரு, செப். 30 - நாடு முழுவதும் வாகனமோட்டிகள் நிலுவையில் வைத்துள்ள கிட்டத்தட்ட இருபது லட்சம் சம்மன்களுக்கான அபராதம் இன்னும் தீர்க்கப்படவில்லை.
வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் அவற்றை செலுத்தத் தவறினால் சம்பந்தப்பட்டோர் சாலைப் போக்குவரத்துத் துறையால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவது உட்பட நடவடிக்கையை எதிர்கொள்வர் என்று ஜே.பி.ஜே. அமலாக்க மூத்த இயக்குனர் டத்தோ முகமது கிப்ளி மா ஹாசன் கூறினார்.
தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பு (AwAS) கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வழங்கப்பட்ட 1,458,577 சம்மன்களும், 114வது (வாகன மாற்ற விசாரணைகள்) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 296,684 சம்மன்களும் 115வது (வாகன ஆய்வு) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 164,598 சம்மன்களும் இதில் அடங்கும்.
அனைத்தையும் சேர்த்தால் செலுத்தப்படாத சம்மன்களின் எண்ணிக்கை மொத்தம் 19 லட்சத்து 19 ஆயிரத்து 859 ஆகும் என அவர் சொன்னார்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு நிலையான அபராத விகிதம் மூலம் கடந்த ஜனவரி முதல் நேற்று வரை 855,300 சம்மன்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
இருப்பினும், நிலுவையில் உள்ள சம்மன்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இது சாலை பயனர்களிடையே காணப்படும் குறைந்த அளவிலான விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
டிசம்பர் 31 வரையிலான சமநிலையான அபராத காலத்தில் தங்கள் சம்மன்களைத் தீர்க்கும் சாலைப் பயனர்கள் 150 வெள்ளியை மட்டுமே செலுத்தினால் போதும். மேலும், கெஜாரா புள்ளி குறைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்றும் கிஃப்லி மேலும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு அபராத விகிதம் விகிதம் 300 வெள்ளியாக மாற்றப்படுவதோடு கெஜாரா புள்ளிகளும் விதிக்கப்படும். மேலும், போக்குவரத்து குற்றவாளிகளும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.