குவாந்தான், செப். 30 - தொலைபேசி அழைப்பு மூலம் பெறப்பட்ட இல்லாத முதலீட்டுத் திட்டத்தால் கவரப்பட்ட இல்லத்தரசி ஒருவர் 223,000 வெள்ளி சேமிப்பை இழந்தார்.
ஐம்பத்தோரு வயதான பாதிக்கப்பட்ட மாதுவுக்கு சந்தேக நபரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் அதிக வருமானத்திற்கு உறுதியளிக்கும் முதலீட்டு வாய்ப்பு குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டதாகப் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் தனிப்பட்ட தகவல்களை வழங்கிய நிலையில் சந்தேக நபர் அனுப்பிய இணைப்பு வழியாக மோபைல் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
அதன் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது தனிப்பட்ட சேமிப்பு மற்றும் மறைந்த கணவரின் பணத்தை பயன்படுத்தி சந்தேக நபர் வழங்கிய ஏழு வங்கிக் கணக்குகளுக்கு 12 பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்.
இருப்பினும், பெறுநரின் கணக்கு மோசடி கும்பலில் சம்பந்தப்பட்டுள்ளது அடையாளம் காணப்பட்டதாக வங்கியால் தெரிவிக்கப்பட்ட பிறகு தான் மோசடி செய்யப்பட்டதை அந்தப் பெண் உணர்ந்தார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் நேற்று பெந்தோங் மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் அளித்ததாகக் கூறிய அவர், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகச் சொன்னார்.