ஷாங்காய், செப் 30 - “வீட்டில் அடுப்பை அணைக்காமல் விட்டுவிட்டேன்" என்கிற பயணியின் பதற்றம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பயணி, ஷங்காயிலிருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார். மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பின் தன்னுடைய வீட்டில் அடுப்பை அணைக்காமல் விமானம் ஏறிவிட்டதை திடீரென நினைவுகூர்ந்திருக்கின்றார்.
அந்நிலையில் அவர் உடனடியாக விமானக் குழுவினரிடம் உதவி கோரியுள்ளார். விமானக் குழுவினரின் விரைவான நடவடிக்கையால் அப்பயணியின் இல்லம் தீ விபத்தில் சிக்காமல் தப்பியது அவருக்கு பெரும் நிம்மதியைத் தந்தது.
அந்நபரின் நிலையை அலட்சியப்படுத்தாமல் கவனமாக எடுத்துக் கொண்ட விமானக் கேப்டன், பயணி வழங்கிய வீட்டு முகவரி, smart கதவு கடவுச்சொல் உள்ளிட்ட தகவல்களை உடனடியாக விமான தரை குழுவுக்கு அனுப்பினார்.
விமான தரை குழுவினர் சம்பந்தப்பட்ட ஊழியர்களை அவரின் வீட்டிற்கு அனுப்பிய போது சமையலறை ஏற்கனவே புகையால் நிரம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அடுப்பின் மேல் வைக்கப்பட்ட முட்டைகள் எரிந்து கருகிய நிலையில் இருந்ததைத்த தொடர்ந்து பெரும் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பே குழுவினர் அடுப்பை அணைத்து, ஜன்னல்களைத் திறந்து, நிலைமையை 20 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்தினர்.
இந்தச் செய்தி விமானத்தில் இருந்த பயணிக்கு தெரிவிக்கப்பட்ட பின்னர், அவர் பெரும் நிம்மதி அடைந்தார். அக்குழுவினருக்கு நன்றியினைத் தெரிவித்து கொண்டார்.
இந்த சம்பவத்தில், வானிலும் தரையிலும் ஒருங்கிணைந்து செயல்பட்ட அனைவரும் இணையத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.