ஷா ஆலம், செப். 30 - சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் திருமணத்தை முன்னிட்டு கிள்ளான் நகரில் பராமரிப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் (எம்.பி.டி.கே.) டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் தெரிவித்தார்.
அரச திருமணத்தில் விருந்தினர்கள் கலந்து கொள்வதற்கு முன்பு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருப்பதை தனது தரப்பு உறுதி செய்து வருவதாக அவர் கூறினார்.
எல்இடி விளக்கு அலங்காரங்கள், இன்டர்லாக் கற்களை பதிப்பது செப்பனிடல் போன்ற சாலை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடுகளுக்கு நாங்கள் 30 லட்சம் வெள்ளிக்கும் அதிகமாக செலவிட்டுள்ளோம்.
மக்கள் பூக்களைப் பறிப்பது அல்லது நாசவேலைகளில் ஈடுபடுவதைத் தடுக்க நாங்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்வோம். எனவே, நகரம் எப்போதும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதிசெய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
அரச திருமண விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹமீட் இவ்வாறு கூறினார். இந்த திருமணத்திற்கு 2,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் மேலும் சொன்னார்.
நெரிசலைத் தவிர்க்க மக்கள் பொதுப் போக்குவரத்து அல்லது கூட்டு கார் பயணச் சேவையை பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.
அக்டோபர் 2 ஆம் தேதி காலை 9.00 மணிக்குத் தொடங்கும் ஊர்வலத்திற்கு வழி விடும் வகையில் சுல்தான் அப்துல் அஜீஸ் அரச கேலரியிலிருந்து இஸ்தானா ஆலம் ஷா வரையிலான பாதை மட்டும் காலை 7.00 மணிக்கு மூடப்படும் என்று அவர் கூறினார்.
அரச மலேசியா காவல்துறையின் 400 உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுவர். ஏதேனும் தொடர்புடைய தேவைகள் இருந்தால் அரச மாநகர் உதவி செய்யும் என்றார் அவர்.
ராஜா மூடா திருமணம்: அனைத்து ஏற்பாடுகளும் தயார் - எம்.பி.டி.கே. அறிவிப்பு
30 செப்டெம்பர் 2025, 1:30 AM