குவாந்தான், செப். 29 - ரொம்பின், கம்போங் கெடாய்க்கில் நேற்று படகிலிருந்து தவறி விழுந்து ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்) ஊழியர் ஒருவர் இன்று நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பங்கேற்ற பொதுமக்களால் காலை 11.25 மணியளவில்
44 வயதான சஹாருடின் ஹருன் என்ற அந்த ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக ரொம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஷெரிப் சாய் ஷெரிப் மண்டோய் தெரிவித்தார்.
படகிலிருந்து விழுந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அவரது உடல் முழுமையான உடையுடன் காணப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மதியம் 12.00 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டு ஆடவரின் உடல் ரொம்பின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் காணாமல் போனது தொடர்பில் நேற்று காலை 10.20 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறை, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் மலேசிய குடிமைத் தற்காப்புப் படை ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய தேடுதல் நடவடிக்கை தொடங்கியது.
சஹாருடினும் அவரது நண்பரும் அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
படகில் வீடு திரும்பும் வழியில் படகின் காற்றாடி வலையில் சிக்கியதால் படகின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த பாதிக்கப்பட்டவர் ஆற்றில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.