ஈப்போ, செப். 29 - தன் தங்கையை தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வி உயர்கல்விக் கூடத்தில் (உப்ஸி) சேர்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த ஆடவர் ஒருவர் பயணத்தின் போது திடீரென மரணமடைந்தார்.
தன் சகோதரிகளை ஏற்றிக் கொண்டு சிரம்பானிலிருந்து தஞ்சோங் மாலிம் நோக்கி சென்று கொண்டிருந்த நிக் முகமது ஷியாருள் அஸிம் நிக் யூசுப் (வயது 29) என்ற அந்த இளைஞர் அதிகாலை 6.30 மணியளவில் சுங்கை பீசி டோல் சாவடியை நெருங்கும் போது திடீரென மயக்கமடைந்ததாக உப்ஸி தெரிவித்தது.
இந்த பதற்றமான சூழலில் முன் பயணி இருக்கையில் அமர்ந்திருந்த நிக் நுர் மைசாரா (வயது 18) என்ற அவ்வாடவரின் தங்கை கார் டோல் சாவடியை மோதுவதைத் தவிர்க்க காரின் ஸ்டியரிங்கை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார்.
அந்த கல்விப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான நிக் முகமது ஷியாருள் உயிரிழந்து விட்டது செர்டாங் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு ஏற்பட்டது அறிகுறி எதுவும் இல்லாத திடீர் மரணம் என்பது சவப்பரிசோதனையில் தெரியவந்தது.
அந்த ஆடவரின் உடல் நல்லடக்கச் சடங்கிற்காக அவரின் சொந்த ஊரான சிரம்பானுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.