கோத்தா கினபாலு, செப் 29 - சபாவில் அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் நகரை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கான ஆற்றல்மிக்க, திறமையான மற்றும் பயனுள்ள பேருந்து சேவை BAS.MY-இன் தொடக்கத்திற்கு முந்தைய நிகழ்ச்சியைப் போக்குவரத்து அமைச்சு நடத்தியது.
இந்நிகழ்ச்சி, சம்பந்தப்பட்ட பேருந்து சேவைகளை வலுப்படுத்துவதற்கான மத்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
அதோடு, இச்சேவை கோத்தா கினபாலுவின் தோற்றத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"இத்திட்டம் அக்டோபரில் கட்டம் கட்டமாக. தொடங்கும். இந்த அக்டோபரிலிருந்து ஜனவரி மாதம் வரை கோத்தா கினபாலு நகரைச் சுற்றி இலவச சேவையை தொடங்கும். எனவே, அடுத்த ஆண்டு, இந்த பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.
கோத்தா கினாபாலுவின் கே.கே. சென்ட்ரலில் அச்சேவையின் தொடக்கத்திற்கு முந்தைய விழாவில் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.
BAS.MY மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச BAS.MY சேவையை வழங்கவிருப்பதோடு, அச்சேவைக்கான கழிவு அட்டையைப் பெற ஒரு முறை மட்டும் 10 ரிங்கிட் செலுத்தினால் போதுமானது.
பெர்னாமா