ஷா ஆலம், செப். 29 - லா நினா பருவநிலை மாற்றம் இவ்வாண்டு இறுதியில் ஏற்படலாம் என வானிலை ஆய்வுத் துறையின் தொடக்க அறிக்கைகள் காட்டும் நிலையில் நிச்சயமற்ற வானிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கும்படி மாநிலத்திலுள்ள அனைத்து 12 ஊராட்சி மன்றங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நீர் சேகரிப்பு குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும் வடிகால்களில் அடைப்பு ஏற்படாமலிருப்பதையும் ஊராட்சி மன்றங்களும் நுட்ப ஏஜென்சிகளும் உறுதி செய்ய வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
அதோடு மட்டுமின்றி ஆற்றின் கரைகள் பாதுகாப்பான நிலையில் உள்ளதையும் நீர் இறைப்பு பம்ப்கள் முறையாக செயல்படுவதையும் உறுதி செய்யும் அதே வேளையில் மரங்கள் விழுவதைத் தடுக்க அவற்றின் கிளைகளை வெட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் நடவடிக்கை மையம் மற்றும் மாவட்ட பேரிடர் நடவடிக்கை மையங்கள் வாயிலாக மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு வானிலை தொடர்பான மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றார் அவர்.
மாநிலத்தில் வெள்ள நிலைமையைக் கையாள்வதில் இவ்விரு நிறுவனங்களும் மத்திய பேரிடர் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து செயல்படும் என்று இன்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, இம்மாதம் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை பருவநிலை மாற்றம் ஏற்படும் என்பதால் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நஜ்வான் கேட்டுக் கொண்டார்.
இந்த பருவநிலை மாற்றம் காரணமாக திடீர் வெள்ளம், மரங்கள் விழுவது, காட்டாற்று வெள்ளம், வலுவற்ற கட்டுமானங்களில் பழுது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.