ஷா ஆலம், செப். 29 - ஸ்ரீ செர்டாங் தொகுதியில் இந்திய மகளிருக்கான சேலை உடுத்தும் மற்றும் மருதாணி இடும் பயிற்சி நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
மகளிர் ஆக்கத்திறன் மையம் (பி.டபள்யு.பி) மற்றும் வார்டா பூச்சோங் அமைப்பின் ஏற்பாட்டில் பயிற்சி ஸ்ரீ செர்டாங், 5/6 சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியில் சுமார் ஐம்பது மகளிர் கலந்து கொண்டர்.
இந்த நிகழ்வுக்கு ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி சிறப்பு வருகை புரிந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், இத்தகைய நிகழ்வுகள் சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்க்கும் அதேவேளையில் வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் கலை, கலாசாரத் திறன்களை அறிமுகப்படுத்துவதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த ஸ்ரீ செர்டாங் தொகுதி பி.டபள்யு.பி. மேலாளர் ரோஸ்மியாத்தி ரோஸ் மற்றும் வார்டா பூச்சோங் தலைவர் கனிமொழி அன்பழகன் ஆகியோருக்கு தாம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்
செர்டாங் ஜெயா வட்டார மக்களிடையே ஆற்றலையும் ஒருமைப்பாட்டையும் வளர்ப்பதற்கு ஏதுவாக இத்தகைய நிகழ்வுகள் அதிகளவில் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.