கிள்ளான், செப். 29 - கலைத் துறையில் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்கில் செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரங்கள் 2025 பாடல் திறன் போட்டியில் 10 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.
இம்மாதம் 15ஆம் நடைபெற்ற இப்போட்டியின் முதல் சுற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட வேளையில் அவர்களில் 21 பேர் அரையிறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நேற்று காலை 10.30 மணி தொடங்கி கிள்ளான் இ-லைப்ரரியில் நடைபெற்ற இந்த அரையிறுதிச் சுற்றில் பத்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகினர்.
இறுதிச் சுற்று புக்கிட் ஜாலில் அரங்கில் வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல் 10 இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு 15,000 வெள்ளி மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் அவர்களின் அரிய முயற்சியில் ஐந்தாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் சிலாங்கூர் மட்டுமின்றி மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜோகூர் ஆகிய மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஒன்பது முதல் 15 வயது வரையிலான சிறார்களை இலக்காக கொண்டு நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ரொக்கப் பரிசினை
வெல்வதற்குரிய வாய்ப்பினை பெறுவர்கள் என்று டாக்டர் குணராஜ் முன்னதாகக் கூறியிருந்தார்.
கலைக் குடும்பம் மற்றும் செஜாத்ரா செந்தோசா சிலாங்கூர் அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தப்படும் இப்போட்டியின் இறுதிச் சுற்றினை புக்கில் ஜாலில் அரங்கில் நடத்துவதற்கு ஏஜெண்டா சூரியா நிறுவனம் பெரிதும் துணை புரிந்துள்ளது என அவர் சொன்னார்.
இளையோர் மத்தியில் மறைந்துள்ள கலைத் திறனை வெளிப்படுத்துவதையும் அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இப்போட்டியை நாங்கள் நடத்தி வருகிறோம் என அவர் கூறினார்.
இந்த போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வாகும் 10 பேரை இறுதிச் சுற்றுக்குத் தயார் படுத்தும் வகையில் கலைக் குடும்பம் அமைப்பின் சார்பில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கலைஞர் வழிகாட்டியாக நியமிக்கப்படுவார் என்றார்.
இபோட்டியில் வெற்றி பெறும் இளம் கலைஞர்களின் திறன் தொடர்ந்து மெருகூட்டப்படுவதை உறுதி செய்ய பயணம் தொடரும். இத்திட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு தொடர்ந்து ஊக்குவிப்பும் வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்றார் அவர்
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற இளம் கலைஞர்கள் தமிழகத் தொலைக்காட்சிகளில் தோன்றி தங்களின் திறனை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
செந்தோசா தொகுதியின் சிறுவர் பாடல் திறன் போட்டி - 10 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு
29 செப்டெம்பர் 2025, 5:22 AM