சிரம்பான், செப். 29 - இரு தினங்களுக்கு முன்னர் நீலாய், லெங்கெங்கில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் கழிவுநீர் வடிகாலில் விழுந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒன்பது நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
புகார்தாரர், ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.
பொதுப்பணித் துறை, இண்டா வாட்டர் கன்சோர்டியம் சென். பெர்ஹாட் மற்றும் தேசிய நீர் சேவை ஆணையம் ஆகிய தரப்பினரிடம் மேலும் நான்கு வாக்குமூலங்களை இன்று நாங்கள் பதிவு செய்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணை செயல்முறையை சீர்குலைக்கும் வகையிலான எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை என்பது சோதனையில் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்றாம் ஆண்டு மாணவரான அப்துல் ஃபாத்தா கைரோல் ரிசால் கடந்த சனிக்கிழமை பள்ளி மைதானத்தில் உள்ள கழிவுநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த சோக சப்பவத்தை விரிவாக விசாரிப்பதற்கு தமது தரப்பு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக் நேற்று கூறியிருந்தார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விசாரணை முடிவுகள் குறித்த முழுமையான அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.