புத்ரஜெயா, செப் 29 : நேற்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1இல் நடைபெற்ற அமலாக்க நடவடிக்கையில், RM20,000 மதிப்புள்ள மூன்று வனவிலங்குகளை மும்பைக்கு கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (பெர்ஹிலித்தான்) மற்றும் KLIA துணை காவல்துறையினரின் ஒத்துழைப்பு மூலம் மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் MH0194 வனவிலங்குகளை கடத்த முயன்ற உள்ளூர் நபரை வெற்றிகரமாக கண்டுபிடித்ததாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) அறிவித்தது.
"46 வயது சந்தேக நபரின் பொருட்களை ஆய்வு செய்ததில் ஒரு சந்தேகத்திற்குரிய உங்கா (குரங்கு வகை) மற்றும் இரண்டு கஸ்கஸ் (cuscus) அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளின் மதிப்பு RM20,000ஐ எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது," என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 [சட்டம் 716] மற்றும் அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தகச் சட்டம் 2008 [சட்டம் 686] ஆகியவற்றின் கீழ் மேலும் விசாரணைக்காக ஏரோபோலிஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
வனவிலங்கு கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதிலும், நாட்டின் முக்கிய நுழைவு எல்லை குற்றங்களுக்கான பாதையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் அதிகாரிகளின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது என்று APKS தெரிவித்துள்ளது.
- BERNAMA