செராஸ், செப் 29 - அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயகத்தின் ஏற்பாட்டில் இரு நாள்களுக்கு நடைபெற்ற தேசிய அளவிலான 19வது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா சிறப்பாக நிறைவுப்பெற்றது.
இதில் அறிவியல் திறன்கள் வழி புத்தாக்க முறையில் படைப்புகளை வெளிப்படுத்திய ஜோகூர், தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றிப் பெற்று பிளாட்டினம் பதக்கத்தை தட்டிச் சென்றது.
இரண்டாம் நிலையில், சிலாங்கூர், காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியும், மூன்றாம் நிலையில் பேராக், பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியும் வெற்றிப் பெற்றன.
இந்த அறிவியல் விழா கடந்த மார்ச் மாதம் தொடங்கி பள்ளி, மாநிலம் அளவில் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டது.
செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர், செராசில் இம்பி மாநாட்டு மையத்தில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான அறிவியல் விழாவில் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்து 70 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவர்கள் பங்ககேற்றிருந்தனர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இவ்விழாவில் பார்வையாளர்களும் திரளாக கலந்து கொண்டது திருப்தியளிப்பதாக நிகழ்ச்சியின் இயக்குநர் சுபாஷ் கிருஷ்ணன் தெரிவித்தார்.
"பெற்றோர் தங்களது நான்கு அல்லது ஐந்து வயது பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். நிகழ்ச்சியைப் பார்வையிட்ட அவர்கள் தங்களது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருப்பதாக கூறினர். இதனைப் பெருமையாகக் கருதுகிறோம்," என்றார் அவர்.
இவ்விழாவில் பெற்றோர், மாணவர்கள் உட்பட சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர்.