கீவ், செப். 29 - கீவ் நகர் நேற்று அதிகாலை கடுமையான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. முழு அளவிலான போர் தொடங்கியப் பின்னர் உக்ரேன் தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த மிகப்பெரிய ரஷ்ய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று சுயேச்சை கண்காணிப்பாளர்கள் கூறினர்.
இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதோடு மேலும் சுமார் 10 பேர் காயமடைந்தனர் என்று கீவ் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் டைமூர் தக்காசென்கோ டெலிகிராம் செய்தி தளத்தில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் இறந்தவர்களில் ஒருவர் 12 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தக்காசென்கோ கூறினார்.
நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உள்ளடக்கிய மாபெரும் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக உக்ரேன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா குறிப்பிட்டார்.
தனது ஆக்கிரமிப்பை நிறுத்த ரஷ்யாவை கட்டாயப்படுத்துவதற்கு ஏதுவாக அந்நாட்டிற்கு எதிராக தண்டிக்கும் வகையிலான தடைகள் விதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தத் தாக்குதல் வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.
இந்தப் போரைத் தொடர்வதால் தனிப்பட்ட முறையில் அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் அவரது பொருளாதாரத்திற்கும் அவரது ஆட்சிக்கும் உள்ள ஆபத்தை புடின் உணர வேண்டும் என்று அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அதுதான் இந்த அர்த்தமற்ற போரை நிறுத்த அவரைத் தூண்டும். இந்த தாக்குதலில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. தெற்கு நகரமான சபோரிஜியாவில் மூன்று சிறார்கள் உட்பட குறைந்தது 16 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.