கோலாலம்பூர், செப். 28- காஜாங், புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நேற்று நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் தொடர்புடைய லோரி ஓட்டுநர் விசாரணைக்கு உதவ இன்று முதல் இரண்டு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய லோரி நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட ஐந்து நபர்களிடமிருந்து தமது துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட லோரியில் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது தொடக்ககட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. பிரேக் பிரச்சனை காரணமாக ஓட்டுநர் லோரியிலிருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த வாகனத்தில் உண்மையில் பிரேக் பிரச்சனைகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன. இதன் தொடர்பில் லோரி ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று காலை 10.50 மணிக்கு நடந்த விபத்தில் ஒரு லோரி, ஒரு கார் மற்றும் இரண்டு எஸ் யு.வி. மோதிக்கொண்டன. இதன் விளைவாக ஒரு வயது ஆண் குழந்தை இறந்த நிலையில் ஏழு பேர் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதற்கிடையில், சம்பவம் நடந்த நேரத்தில் காரில் இறந்த குழந்தை தனது தாய், பாட்டி மற்றும் இரட்டையரில் இன்னொரு குழந்தையும் இருந்ததாக இருந்ததாக நாஸ்ரோன் கூறினார்.
சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செர்டாங் மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இரண்டு எஸ்.யு.வி. வாகனங்களில் இருந்த மற்ற பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் காஜாங் மருத்துவமனை மற்றும் காஜாங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.
புக்கிட் காஜாங் டோல் சாவடி விபத்து- லோரி ஓட்டுநருக்கு தடுப்புக் காவல்
28 செப்டெம்பர் 2025, 9:54 AM