ஷா ஆலம், செப். 28- இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைக்கக்கூடிய ஒரு புதிய செயல் முறையை வகுப்பதில் அனைத்து மாநிலங்களும் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் கூறினார்.
நாட்டில் விவசாயம் சார்ந்த துறைகளில் முன்பு ஆதிக்கம் செலுத்திய மாநிலங்களில் ஒன்றான சிலாங்கூரினால் பல்வேறு வளங்களைக் கொண்ட பிற மாநிலங்களின் ஒத்துழைப்பு இன்றி போதுமான விநியோகத்தை வழங்க முடியாது என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் மட்டும் உள்ள 90 லட்சம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் நவீனமயமாக்கல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தின் மூலம் தேசிய அளவில் உணவுச் சங்கிலியை முழுமைப்படுத்துவதில் நாங்கள் உதவ முடியும்.
ஒவ்வொரு மாநிலமும் நிலையான கட்டமைப்பைக் கொண்டிருப்பது உட்பட தத்தம் பங்கை வழங்கும் பட்சத்தில் நாடு முழுவதும் உணவு விநியோகம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். மேலும் இறக்குமதி விகிதத்தைக் குறைக்க முடியும் என்று அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள செக்சன் 13, விளையாட்டரங்கில் உள்ள கார்னிவல் சதுக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த சவால்கள் உள்ளன. குறிப்பாக நகர்ப்புற பகுதிகளை உள்ளடக்கியதோடு இதற்கு அதிக செலவு உண்டாகிறது என்றார் அவர்.
மற்ற மாநிலங்கள் நவீனமயமாக்கலின் அதிக மதிப்புள்ள அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வழக்கமான முறைகளைப் பயன்படுத்தி உணவு விநியோகத்தின் அளவை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டவையாக விளங்க வேண்டும் என்றும் இஷாம் பரிந்துரைத்தார்
உணவு இறக்குமதியைக் குறைப்பதில் மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- இஷாம் கோரிக்கை
28 செப்டெம்பர் 2025, 5:52 AM