இஸ்தான்புல், செப். 28- காஸாவை நோக்கிச் செல்லும் உதவிப்பொருள் படகு அணி இப்போது இஸ்ரேலின் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்திலிருந்து 463 கடல் மைல் தொலைவில் உள்ளதாக ஏற்பாட்டாளர்களின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இயந்திரக் கோளாறுகளைச் சரிசெய்வதற்காக ஒரு சிறிது நேரம் நிறுத்தியப் பின்னர் தாங்கள் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் நான்கு முதல் ஏழு நாட்களுக்குள் படகுகள் இலக்கைச் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குளோபல் சுமுட் ஃப்ளோட்டிலா கூறியது.
இன்னும் இரண்டு நாட்களில் அதிக ஆபத்துள்ள மண்டலத்திற்குள் படகு அணி நுழையும். அப்போது உலகளாவிய விழிப்புணர்வும் ஒற்றுமையும் மிகவும் தேவைப்படும் என்று எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஏற்பாட்டாளர்கள் பதிவிட்ட ஒரு அறிக்கை தெரிவித்தது.
சிசிலியின் கட்டானியா நகரில் உள்ள சான் ஜியோவானி லி சூட்டி துறைமுகத்திலிருந்து 10 சிவிலியன் கப்பல்களைக் கொண்ட மற்றொரு படகு அணி 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 70 சமூக ஆர்வலர்களுடன் சுதந்திர புளோட்டிலா கூட்டணியுடன் இணைந்து புறப்பட்டதாக காஸா முற்றுகையை முறியடிப்பதற்கான அனைத்துலக குழு கூறியது.
இந்த அணியில் பங்கேற்றவர்களில்
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
இஸ்ரேலிய முற்றுகையை உடைத்து காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை குறிப்பாக மருத்துவப் பொருட்களை வழங்குவதற்காக சுமார் 50 படகுகளைக் கொண்ட குளோபல் சவுத் ஃப்ளோட்டிலா இந்த மாத தொடக்கத்தில் புறப்பட்டது.
கடந்த மார்ச் 2 முதல் இஸ்ரேல் காசாவுக்கான கடப்புப் பாதையை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் உணவு மற்றும் உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் தடுக்கப்பட்டு பஞ்ச நிலைமை மோசமடைந்துள்ளது.
குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே அவ்வப்போது அனுமதிக்கப்படுகின்றன. மேலும் அவற்றில் பல ஆயுதமேந்திய குழுக்களால் கைப்பற்றப்படுகின்றன. அக்கும்பல்கள் இஸ்ரேலால் பாதுகாக்கப்படுவதாக காசா அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஃப்ளோடிலா உதவி படகு அணி காஸாவை நெருங்குகிறது-ஏழு நாட்களில் இலக்கை அடையும்
28 செப்டெம்பர் 2025, 3:40 AM