ஷா ஆலம், செப். 28- இம்மாதம் 30ஆம் தேதி தொடங்கும் 'பூடி95' (BUDI95) பெட்ரோல் மானியத் திட்ட அமலாக்கத்தை முன்னிட்டு அரசாங்கம் செயல்படுத்திய இலவச புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று நாட்களில் சிலாங்கூர் மாநில தேசிய பதிவுத் துறை சேதமடைந்த 850 மைகார்ட் சில்லுகள் தொடர்பான சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.
மை கார்டு புதுப்பித்தல் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டி வருவதாக அதன் இயக்குனர் முகமது ஹபீஸ் அப்துல் ரஹீம் கூறினார்.
கடந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பித்தல் நடவடிக்கையின் போது சேதமடைந்த 850 சில்லுகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் மட்டும் சிலாங்கூர் மாநில பதிவுத் துறை புதிய விண்ணப்பம், சேதம், மாற்றுவது மற்றும் காணாமல் போனது உள்பட 11,000க்கும் மேற்பட்ட மைகார்ட் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
அதே சமயம், பொதுமக்கள் தங்கள் முக்கியமான ஆவணங்களின் பாதுகாப்பு குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் உடனடியாக பதிவுத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைவூட்டினார்.
'பூடி95' திட்டம் சீராக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக இலவச மைகார்ட் புதுப்பித்தல் திட்டம் வரும் அக்டோபர் 7 வரை அமலில் இருக்கும்.
மைகார்ட் சிப் பழுது- சிலாங்கூர் பதிவுத் துறையில் மூன்று நாட்களில் 850 சம்பவங்கள் பதிவு
28 செப்டெம்பர் 2025, 3:25 AM