கோலாலம்பூர், செப். 28- நீலாய், லெங்கெங்கில் உள்ள ஒரு பள்ளியின் கழிவு நீர்க்குழியில் விழுந்து மூன்றாம் ஆண்டு மாணவர் இறந்ததற்கு சீரான செயலாக்க நடைமுறைகள் பின்பற்றத் தவறியது காரணமாக இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சம்பவம் குறித்து தமது தரப்பு தீவிரமாக விசாரித்து வருவதாகக் கூறிய கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக், கல்வி நிறுவனங்களின் அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சம்பந்தப்பட்ட அம்சங்களில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று வலியுறுத்தினார்.
கல்விக் கூடங்களில் உள்ள வசதிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு அனைத்து பள்ளி நிர்வாகிகள், வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் மாநில கல்வி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும் பள்ளிகள் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர்க் குழியில் விழுந்து 9 வயது சிறுவனான அப்துல் ஃபாத்தா கைரோல் ரிசால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காலை 11.00 மணியளவில் நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு தகவல் கிடைத்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்
கழிவுநீர்க் குழியில் விழுந்து மாணவர் மரணம்- கடும் நடவடிக்கை அமைச்சர் எச்சரிக்கை
28 செப்டெம்பர் 2025, 3:11 AM