ஷா ஆலம், செப் 28- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் எட்டு இடங்களில் நடைபெறுகிறது.

அத்தியாவசிய சமையல் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த ஏஹ்சான் ரஹ்மா விற்பனை இன்று காலை 9.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை தாமான் மேடான், குவாங், கோம்பாக் செத்தியா, உலு கிளாங், புக்கிட் அந்தாராபங்சா ஆகிய தொகுதிகளிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை புக்கிட் மெலாவத்தி மற்றும் ஸ்ரீ கெம்பங்கான் ஆகிய தொகுதிகளிலும் நடைபெறுகிறது. மலிவு விற்பனை நடைபெறும் இடங்களின் பட்டியல் கீழே விளக்கப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி கிரேட் முட்டை 8.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 2 கிலோ 10.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 12.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
மேலும், இந்த விற்பனையில் புதிதாக மாவு (வெ.2.00), சார்டின் (வெ.5.50), பீகூன் (வெ.2.50), சோள பிஸ்கட் (வெ.3.00), சலவை சோப்பு (வெ.16.00) மற்றும் குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் (வெ.12.00) ஆகிய பொருள்கள் விற்பனைக் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை குறைப்பதில் மாநில அரசு காட்டி வரும் அக்கறையை இந்த திட்டம் புலப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் பத்து ஏஹ்சான் மார்ட் பல்பொருள் கடைகளைத் திறக்க பி.கே.பி.எஸ். திட்டமிட்டுள்ளது. தற்போது சுங்கை துவா மற்றும் பண்டான் இண்டா ஆகிய இடங்களில் இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ள வேளையில் உலு கிளாங்கில் இதன் கிளை விரைவில் திறக்கப்படவுள்ளது.