போர்ட் டிக்சன், 27 செப்: 2026 ஜனவரி 1 முதல் சிறிய அளவிலான குப்பை கொட்டும் குற்றவாளிகளுக்கு, அதிகபட்சம் ஆறு மாத காலத்தில் 12 மணி நேரத்திற்குள் சமூக சேவை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. அதேசமயம், குற்றத்தை மீண்டும் செய்யாமல் தடுக்கவும், எலிகள், ஈக்கள், கொசுக்கள் போன்ற நோய்களை பரப்பும் வெக்டர் மூலம் ஏற்படும் அபாயங்களை குறைக்கவும் உதவும் என்றார் அவர்.
காரிலிருந்து குப்பை எறிவது, சிகரெட் துண்டுகள், திசு, பிளாஸ்டிக், டின், உணவு பாக்கெட் போன்றவற்றை பொதுவிடங்களில் வீசும் யாராக இருந்தாலும், அவர்கள் சிறப்பு ஜாக்கெட்டை அணிந்து பொதுவிடங்களில் குப்பை எடுக்க, வடிகால் சுத்தம் செய்ய, பொதுக் கழிப்பறைகள் சுத்தம் செய்ய உத்தரவிடப்படுவார்கள்.
இந்த அணுகுமுறை திருத்தும் தன்மை கொண்டதுடன், மனிதநேயப் பெறுமதியையும் எடுத்துக்காட்டுகிறது. குற்றவாளிகள் தங்களின் செயல்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் விளைவுகளை நேரடியாக உணர முடியும்,” என்று அவர் உலக சுத்தம் செய்வதற்கான நாள் 2025-ஐ ஒட்டி நடைபெற்ற மலேசியா சுத்தம் செய்வோம் நாள் (HCM) தேசிய மட்ட துவக்கவிழாவில் உரையாற்றினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சுத்தம் செய்வோம் நிகழ்ச்சியில் நாடு முழுவதும் 100,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாகவும், அதேசமயம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை குறைந்தபட்சம் தினமும் 3,000 கிலோகிராம் சேகரித்து மலேசியா சாதனை புத்தகத்தில் இரண்டு புதிய சாதனைகளை உருவாக்குவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.