நீலாய், 27 செப்டம்பர்: இன்று காலை ஒன்பது வயது சிறுவன் ஒருவன் பள்ளியில் மூடப்படாத கழிவுநீர் குழியில் விழுந்து உயிரிழந்தார்.
காலை 11 மணியளவில் நீலாய் மாவட்ட போலீஸ் தலைமையகம் இந்த சம்பவம் குறித்து தகவல் பெற்றதாக நெகிரி செம்பிலான் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ அல்சாப்னி அஹ்மத் தெரிவித்தார். பள்ளியில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டி நேரத்தில், மூடப்படாத கழிவுநீர் வாய்க்காலில் சிறுவன் விழுந்ததை பொதுமக்கள் கண்டு தெரிவித்தனர் என வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
மேலும், மீட்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுவனை காப்பாற்றி சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. மரணத்தின் காரணத்தை கண்டறிய ரெம்பாவ் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டதாகவும், ஆரம்ப சோதனையில் எந்தவித குற்றச்செயல் கூறுகளும் இல்லை என்றும் அவர் விளக்கினார்.
பொதுமக்கள் தேவையற்ற ஊகங்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.