ஷா அலாம், 26 செப்: மலேசிய மலாய் நகைச்சுவை சங்கம், படைப்புத் திறன் பொருளாதாரம் அல்லது ஜிங்கா பொருளாதாரம் குறித்த தெளிவான கொள்கையை உருவாக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதன் நோக்கம், உள்ளூர் நகைச்சுவைத் துறையை மேம்படுத்தி, அதிக வருவாய் உருவாக்கக்கூடிய வலுவான சூழலை ஏற்படுத்துவதாகும்.
இந்த கோரிக்கை, வரும் நவம்பர் மாதம் சிலாங்கூர் அரசு அறிமுகப்படுத்த உள்ள படைப்புத் திறன் பொருளாதார செயல் திட்டம் 2025–2035-இன் திசையோடு இணங்கியுள்ளது. சமீபத்தில், ஷா அலாமில் நடைபெற்ற சிலாங்கூர் படைப்புத் திறன் பொருளாதார எக்ஸ்போ (SCEE25)-க்கு பின் இந்த முயற்சி வலுப்பெற்றது.
2009-ஆம் ஆண்டு இந்தோனேசியா படைப்புத் திறன் அமைச்சகம் அமைத்து வெற்றியை நிரூபித்துள்ளது என சங்கத் தலைவர் மொஹ்த் ரிஸால் பஹ்மி முக்தர் கூறினார். அங்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி பெற்ற நகைச்சுவை சமூகங்கள் உள்ளன. ஆனால் மலேசியாவில், நகைச்சுவைத் துறை இன்னும் தனித்தனியாகச் செயல்படுகிறது,” என்றார்.
2023-இல் தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் தற்போது 23 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்த நிதி பற்றாக்குறை மிகப் பெரிய சவாலாக உள்ளது.
“தற்போது, நாங்கள் நிகழ்ச்சிகளை Rumah Aktivis YRN-இல் நடத்துகிறோம். பார்வையாளர்கள் இலவசமாக வரலாம், நகைச்சுவையாளர்கள் தங்கள் நிகழ்ச்சியை பதிவு செய்து போர்ட்ஃபோலியோவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் பெரிய மண்டபங்களை வாடகைக்கு எடுப்பது, மேடை, ஒலிபதிவு, ஆகியவற்றின் செலவுகள் பெரிய தடையாக உள்ளன,” என்று அவர் விளக்கினார்.
மேலும், சில நகைச்சுவையாளர்கள் இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் அழைப்புகளைக் கூட நிதி காரணங்களால் நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அதனால், அரசு நிதி உதவி, மானியம், வசதி மற்றும் விளம்பர உதவிகளை நகைச்சுவை கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
“இந்த உதவிகள் கலைத்திறனைக் கட்டியெழுப்புவதோடு, தொடர்பு மற்றும் பொது பேச்சுத் திறன்களை மேம்படுத்தும் தளமாகவும் இருக்கும்,” என்றார்.
சங்க துணைத் தலைவர் மொஹ்த் நொர்னிசாம், ஜிங்கா பொருளாதாரம் கொள்கை உருவாக்கத்தில் கலைஞர்களை நேரடியாகச் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார். “அரசு, கலைஞர்களுடன் உரையாடி, உண்மையான சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும். கொள்கை வடிவமைப்பில், பிரதான கலைஞர்களும் சுயசார்பு கலைஞர்களும் பங்கேற்க வேண்டும்,” என்றார்.
மேலும், முறையான சூழல் இருந்தால், மலேசிய நகைச்சுவைத் துறை சர்வதேச சந்தையிலும் சிறந்து விளங்க முடியும் என்றார். “நான் ஜொகூர் பாருவில் நடத்திய நிகழ்ச்சியில், சுமார் 40 சதவீத பார்வையாளர்கள் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தனர். நிதி மற்றும் விளம்பர ஆதரவு கிடைத்தால், நாங்கள் இன்னும் அதிகமான வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்க்க முடியும்,” என்றும் அவர் கூறினார்.
சிலாங்கூர் தற்போது படைப்புத் திறன் பொருளாதார மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற SCEE25 கண்காட்சியில், 2025–2035 திட்டம் நவம்பரில் வெளியிடப்படும் என மாநில எக்ஸ்கோ நஜ்வான் ஹலிமி அறிவித்தார்.
SCEE25 கண்காட்சியில் மூன்று மாவட்டங்கள் முக்கிய கவனப்பகுதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை கோல சிலாங்கூர், பெட்டாலிங், சைபர்ஜெயா ஆகியவையாகும். இந்த முயற்சியை சிலாங்கூர் இளைஞர் சமூக அமைப்பு, மாநில பொருளாதார திட்டமிடும் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது. அரசின் இலக்கு, படைப்புத் திறன் பொருளாதார துறை 2035-க்குள் RM20 பில்லியன் அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்க வேண்டும் என்பதாகும்.