கோத்தா பாரு, செப். 26 - தனது ஏழு வயது உறவுக்காரச் சிறுவனை சுத்தியலால் தாக்கி கடுமையாக காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 46 வயது நபர் நேற்று மாலை பந்தாய் மெலாவியில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
சந்தேக நபர் மாலை 5.15 மணியளவில் பாச்சோக், ஜாலான் பாசார் ஜெலாவத்தில் உள்ள ஒரு கடையில் சிறுவனைத் தாக்கியப் பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சவுக்கு மரத்தில் சங்கிலியால் தூக்கிலிட்டு தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பாச்சோக் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி சுலைமான் தெரிவித்தார். சந்தேக நபரின் உடலை தடயவியல் குழு கைப்பற்றியது. பாதிக்கப்பட்டச் சிறுவன் தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில்
குபாங் கிரியானில் உள்ள மலேசியா அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
அந்த ஆடவரின் மரணம் தற்கொலையா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதன் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்ட சிறுவனின் 36 வயது அத்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆபத்தான ஆயுதத்தால் தாக்கி கடுமையான காயம் விளைவித்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 மற்றும் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1) வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அஸ்ரி அந்த அறிக்கையில் கூறினார்.
உறவுக்காரச் சிறுவனை சுத்தியலால் தாக்கிய ஆடவர் மரத்தில் தூக்கில் தொங்கினார்
26 செப்டெம்பர் 2025, 9:13 AM