கோலாலம்பூர், செப். 26- பெட்டாலிங் ஜெயா, சுங்கைவேயில் உள்ள ஒரு வளாகத்தில் சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் வெளிநாட்டுப் பெண்களை வைத்து வாட்ஸ்அப் செயலி மூலம் வாடிக்கையாளர் சேவையை (ஜி.ஆர்.ஓ.) வழங்கி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது.
இரவு 10.00 மணியளவில் தொடங்கிய இந்நடவடிக்கையின்போது அந்த வளாகத்தில் இருந்த 30 வெளிநாட்டுப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை அறிவித்தது.
18 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் லாவோஸ், மியான்மர், வியட்நாம் மற்றும் தாய்லாந்து பிரஜைகள் ஆவர். அவர்கள் சுற்றுலா பாஸ்களைப் பயன்படுத்தி பயணிகளாக நாட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. எனினும், அவர்கள் பாஸ்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று அத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
வாடிக்கையாளர்கள் புலனம் வழியாக ஜி.ஆர்.ஓ.வுக்கு ஆர்டர் செய்யலாம் என்பதோடு அதன்படி வாக்குறுதியளிக்கப்பட்ட இடத்திற்கு சம்பந்தப்பட்ட பெண் அழைத்துச் செல்லப்படுவார் என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது சில பெண்கள் தங்களை உள்ளூர்வாசிகள் எனக் கூறி அதிகாரிகளை ஏமாற்ற முயன்றனர். ஆனால் அந்த தந்திரம் பலிக்கவில்லை.
சில பெண்கள் தப்பியோட முயன்றனர். அவர்கள் ஆனால் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டனர். அந்த இடத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் சிறிது எதிர்ப்பு ஏற்பட்டது தவிர வேறு எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை என்று அது கூறியது.
புலனம் வழி ஜி.ஆர்.ஓ. சேவையை வழங்கிய கும்பல் முறியடிப்பு- 30 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது
26 செப்டெம்பர் 2025, 7:17 AM